ஆபீஸ் 2010 புதுமைகளும் வசதிகளும்

office2010மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.)

சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ் 2010 குறித்த அறிவிப்பு வெளியானது. முழுமையான தொகுப்பின் பயன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் தனித் தன்மைகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் போன்றவை சற்று கசியத் தொடங்கின.  இந்த ஆபீஸ் 2010 தொகுப்பு இது பயன்படுத்துவோருக்கான தன்மையினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடும் மேல் மட்ட ஆய்வாள்ர்கள் மற்றும் அறிஞர்கள், விற்பனைச் சந்தையில் ஈடுபடும் அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு பிரிவுகளில் ஈடுபடுவோர் என ஒருவரின் வேலைத் தன்மைக்கேற்ப இந்த ஆபீஸ் தொகுப்பினைச் செயல்படுத்த வழி தரப்பட்டிருக்கும்.
இந்த தொகுப்புடன் சேர்த்து மைக்ரோசாப்ட் இணைய அடிப்படையில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பினை வழங்க இருக்கிறது. வெப் பேஸ்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் இத்தொகுப்பில் எக்ஸெல், பவர்பாய்ண்ட், வேர்ட் மற்றும் ஒன் நோட் அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இவை இயக்கிக் காட்டப்பட்டன. பிரவுசரின் வழியாகச் சென்று இந்த அப்ளிகேஷன் தொகுப்புகளை இயக்கி பைல்களை நாம் தயாரிக்க முடியும். இந்த வெப் அப்ளிகேஷன்கள் சபாரி, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக இயங்கும். இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்த மார்க்கட்டில் இது போன்ற அப்ளிகேஷன்களை மைக்ரோசாப்ட்டிற்கு எதிராகக் கொண்டு வரும் கூகுள் டாக்ஸ் போன்ற மற்ற வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குப் போட்டியாகவும் இது இருக்கும்.

ஆபீஸ் தொகுப்பு 2010 இரு வகைகளில் தரப்பட இருக்கிறது. 32 பிட் அமைப்பிலும் 64 பிட் அமைப்பிலும் இயங்கும் வகையில் இரண்டு வகை தரப்படும். ஆபீஸ் தொகுப்பு ஒன்று இவ்வாறு இரண்டு வகைகளுக்கும் தரப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதன் வேர்ட் தொகுப்பின் புதுமையாக இமேஜ் எபக்ட்ஸ் கூட்டாகத் தரப்படுகிறது. வேர்ட் மற்றும் பிற ஆபீஸ் புரோகிராம்களில் பேஸ்ட் பிரிவியூ என்ற ஒட்டுமுன் காட்சி தரப்படுகிறது. இதன் மூலம் பேஸ்ட் பயன்படுத்துபவர்கள் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதனை அறிந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப பல பேஸ்ட் முறைகளைச் சோதனை செய்து பார்த்து செயல்படலாம்.

நன்றி: தினமலர் – கம்ப்யூட்டர் மலர்

Post a Comment

0 Comments