என் இனிய கணினியே


என் இனிய கணினியே.
இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக
நான்
யார் முகத்தையும் பார்த்ததில்லை.
இவ்வளவு நேரம் யாரோடும்
விரல் தீண்டல் தொடர்ந்ததில்லை.
அதெப்படி
உன்னால் மட்டும் முடிகிறது ?
கண்ணுக்குத் தெரியாத
கணிதச் சுருக்கங்களின் சுளுக்கெடுக்க ?
முகம் மனசின் கண்ணாடி
என்பது
முகமே கண்ணாடியாகிப் போன
உன்னிடம் தானே உண்மையாகிறது ?
பொழுதுகள் மாறினாலும்
முகங்கள் மாறினாலும்
விடைகளை மாற்ற மறுப்பது
நீ மட்டும் தானே.
நீ மட்டும் இல்லையென்றால்
உலகம் ஒருவேளை
காகிதக் கட்டுக்களில்
புதைக்கப் பட்டிருக்கலாம் !!!
நீ மட்டும் இல்லையென்றால்
உலகைப் பிடித்தெடுக்கும்
ஓர் வலை
உருவாகாமலேயே போயிருக்கலாம்.
நீ என்ன செய்வாய் என்று கேட்ட காலம்
போய்விட்டது.
என்ன செய்ய மாட்டாய் என்கிறது
கலியுகம்.
யாரோ பகல் கனவு கண்டால்
அதை
பிரதி எடுத்துக் கொடுக்கிறாய்.
இரவுக் கனவை இரவல் வாங்கி
மென்பொருளாய் மொழி பெயர்க்கிறாய்.
இப்போதெல்லாம்
மனித மொழிகளுக்கிங்கே மரியாதை இல்லை
கணினி மொழிகளுக்குத் தான்
உலக அங்கீகாரம்.
என்ன..???
விரல்களால் பேச வேண்டும்
அது ஒன்று தான் வித்தியாசம் !!!
சில ஆண்டுகளுக்கு முன்பு
உலகம் உன்னை ஆண்டுகொண்டிருந்தது
இப்போது
நீ ஆட்சியைக் கைப்பற்றி விட்டாய்.
மிட்டாய்க் கடைகளின்
இனிப்புக் கணக்குகள் கூட
நீ இல்லையென்றால் கசந்து போகிறது.
ஏனென்றால்
எங்கள் மூளைக்குச் செல்லும்
முக்கால் வாசி நரம்புகளும்
விரலுக்கும் விழிகளுக்குமாய்
இடம் பெயர்ந்து விட்டது.
எங்கள் மானிட சமூகம்
வைரஸ் வினியோகம் செய்வது,
நோய் தருவதும் மருந்து தருவதும்
நாங்கள் என்பதை
நீ
மறந்துவிடாமல் இருக்கத்தான்.
காலம் மாறிவிட்டது
முன்பு கலப்பை இருந்த இடத்தில்
இப்போது கணிப்பொறி.
முன்பு வரப்புகள் இருந்த இடத்தில்
இப்போது வன்பொருள்கள்.
ஆனாலும் எங்கள் வயிறு
இன்னும்
மென்பொருள் தின்னப் பழகவில்லை.

Post a Comment

0 Comments