இணையதளப் பயன்பாடு : மூன்றாம் இடம் இந்தியாவுக்கு

இணையதளப் பயன்பாடு

மூன்றாம் இடம் இந்தியாவுக்கு



Image

இணையதளத்தை பயன்படுத்துவதில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து, மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இங்கு 10 கோடி பேர் லேப்-டாப், கம்ப்யூட்டர்கள் மூலம் இணையதளம் பயன்படுத்துவதும், அவர்களில் நான்கு கோடி பேர் மொபைல்போன் வாயிலாக இணையதளம் பயன்படுத்துகின்றனர் என்பதும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில், தகவல் தொழில்நுட்ப துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக கம்ப்யூட்டர், இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்.கே.ஜி., படிக்கும் குழந்தைகள் முதல் 80 வயது முதியவர்கள் வரை உட்கார்ந்த இடத்தில் இருந்து, இணையதளம் மூலம் உலகத்தையே வலம் வருகின்றனர். அனைத்து விஷயங்கள் தொடர்பான தகவல்களையும் இணையதளத்தில் பெற முடிவதால், இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாகி விட்டது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் அதிகமானோர் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அங்கு 30 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருவதாக கூகுள் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அடுத்ததாக, சாப்ட்வேர் வளர்ச்சியில் சரித்திரம் படைத்த அமெரிக்காவில் 20 கோடியே 70 லட்சம் பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இந்த வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இங்கு 10 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இவர்களில், நான்கு கோடி பேர் மொபைல்போன் வாயிலாக இன்டர்நெட்டை உபயோகிக்கின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவில் 20 லட்சம் பேர் மட்டுமே மொபைல்போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தி வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இது 20 மடங்கு அதிகரித்துள்ளது. வரும் 2012ம் ஆண்டிற்குள் மொபைல்போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை லேப்-டாப், கம்ப்யூட்டர்கள் மூலமும் இன்டர்நெட்டை பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று கூகுள் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொபைல்போன் வாயிலாக,

இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் மொபைல்போன் பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்களில், இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் வெறும் 8 சதவீதம் பேர் மட்டுமே. அவர்களும் ரிங் டோன், திரைப்பட பாடல்கள் ஆகிய விஷயங்களை, டவுண்லோடு செய்வதற்காகவே இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments