புதுக் கம்ப்யூட்டர் வாங்கியாச்சா!

குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய கூடுதல் திறனுடன் கம்ப்யூட்டர் வாங்குவது இப்போது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. ஏனென்றால், நம் அன்றாடத் தேவைகள் பலவற்றை கம்ப்யூட்டர் தான் முடிவு செய்கின்றன. எனவே நம் தேவைகளைப் பொறுத்து, இரண்டாவதாக, மூன்றாவதாக எனக் கம்ப்யூட்டர்களை வாங்கிக் கொண்டு போகிறோம்.
இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக கம்ப்யூட்டர் வாங்கிய பின் முந்தைய கம்ப்யூட்டரை என்ன செய்கிறோம்? நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. பழையனவற்றை தூக்கிப் போடுவதே இல்லை. இது பல விஷயங்களில் தேவையற்ற ஒன்று என்றாலும், கம்ப்யூட்டர் விஷயத்தில், முந்தைய பழைய கம்ப்யூட்டரைச் சில காலமேனும் வைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கியவுடன் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. முதலில் பழைய கம்ப்யூட்டரில் பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவும். இவற்றில் எவை எல்லாம், புதிய கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தேவையாக இருக்கும் என்று அந்த பட்டியலில் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம்களை டிஸ்க் வடிவில் நீங்கள் வாங்கியிருந்தால், அந்த டிஸ்க்குகளை எடுத்து வைத்திடுங்கள். அவை இயக்கப்படும் வகையில் நல்ல நிலையில் உள்ளனவா என்று பார்க்கவும். டவுண்லோட் செய்திருந்தால், மீண்டும் அவை கிடைக்கும் தளங்களுக்கான முகவரிகளைச் சோதித்துக் குறித்து வைக்கவும். இந்த புரோகிராம்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டிருந்தால், அந்த எண்களையும் பாதுகாப்பாக எழுதி வைக்கவும்.
2. அடுத்து புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், ஒரு டயலாக் பாக்ஸ் அல்லது விஸார்ட் உங்களை வழி நடத்தும். முதலாவதாக அட்மினிஸ்ட் ரேட்டர் யூசர் அக்கவுண்ட் திறக்குமாறு கேட்டுக் கொள்ளும். ஏற்கனவே முந்தைய கம்ப்யூட்டரில் என்ன பெயர் பயன்படுத்தினீர்களோ, அதனையே பயன்படுத்தவும். கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் கொடுக்கச் சொல்லி கேட்கும். இங்கு புதிய பெயரைக் கொடுக்கவும். முந்தைய கம்ப்யூட்டருக்குக் கொடுத்த பெயரைத் தர வேண்டாம்.
3. அடுத்து உங்கள் புதிய கம்ப்யூட்டரில், அதனைத் தயாரித்தவர், அவர் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களையும், தன் நிறுவனத்தின் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் பதிந்து வைத்து அனுப்பியிருப்பார். இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தேவையற்றதாக இருக்கும். எனவே இவற்றை நீக்குங்கள். இவை எல்லாம் விற்பனைக்கான சில வழிகளே. இவற்றைக் காட்டிப் பின்னர், கட்டணம் செலுத்தி சில புரோகிராம்களை வாங்கச் சொல்வார்கள். இவற்றை எப்படி நீக்கலாம்? கண்ட்ரோல் பேனல் சென்று Add or Remove Programs மூலம் நீக்கலாம். முழுமையாக நீக்கப்படுவதனை உறுதி செய்திட, இந்த புரோகிராம்களை Revo Uninstaller அல்லது Total Uninstall புரோகிராம்கள் மூலம் நீக்கலாம்.
4. தேவையற்றது நீக்கப்பட்டவுடன், இனி, உங்களுக்குத் தேவைப்படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களைப் பதியவும். இந்த புரோகிராம் களைப் பதிந்தவுடன், அந்த புரோகிராம் களைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று, அவற்றிற்கான அப்டேட் புரோகிராம்கள் தரப்பட்டிருந்தால், அவற்றையும் டவுண்லோட் செய்து இண்ஸ்டால் செய்திடவும். இது போன்ற அப்டேட் செய்யக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும், இணைய இணைப்பில் இருந்தவாறே கம்ப்யூட்டரில் அப்டேட் செய்யப்படக் கூடியவையாக இருக்கும். இந்த புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், அவை இயங்க கம்ப்யூட்டரை மீண்டும் இயக்க வேண்டும் என நினைவூட்டினால், சோம்பல் படாமல், மீண்டும் ஒரு முறை இயக்கவும். அப்போதுதான், அந்த புரோகிராம் முழுமையாக இயங்குகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
5.கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்பட்ட சவுண்ட் கார்ட், வீடியோ கார்ட் ஆகியவற்றிற்கு,அவற்றிற்கான ட்ரைவர்களை நிறுவத் தேவை இருக்காது. ஆனால் நீங்களாக இணைக்கும் சாதனங்களுக்கு ட்ரைவர் புரோகிராம் களை இன்ஸ்டால் செய்திட வேண்டும். பிரிண்டர், வெப் கேமரா, ஸ்கேனர் போன்றவை இந்த பட்டியலில் அடங்கும். உங்களுடைய மொபைல் போன் களுக்கான அப்ளிகேஷன் களையும், புதிய கம்ப்யூட்டரில் பதிந்திட வேண்டியதிருக்கலாம்.
6. அனைத்து புரோகிராம்களும் பதிந்து முடிக்கப்பட்டவுடன், புதிய கம்ப்யூட்டரை உங்கள் இனிய தோழனாக (தோழியாக!) மாற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும், உங்களுக்குப் பிரியமான புரோகிராம்களை ஸ்டார்ட் மெனு அல்லது டாஸ்க் பாருக்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் அதிகம் நேசிக்கும் வால் பேப்பர், ஸ்கிரீன் சேவர் காட்சிகளை செட் செய்திடுங்கள். முந்தைய கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்தி வந்தால், அதே பெயர்களில், அவற்றை இங்கும் உருவாக்கவும்.
7. இப்போது உங்கள் புதிய கம்ப்யூட்டர் முழுமையாக இயங்க அனைத்து புரோகிராம்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். சரி, அவற்றில் இயங்க டேட்டா வேண்டும் அல்லவா? இவற்றை முந்தைய கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே காப்பி செய்து கொண்டு வரலாம். அல்லது இருக்கின்ற நெட்வொர்க்கில் இரண்டு கம்ப்யூட்டரையும் இணைத்து, இணைத்த நிலையில் எளிதாக மாற்றலாம். அதற்கு முன், புரோகிராம்களுடன் தயாரான நிலையில், உங்கள் புதிய கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை ஒரு இமேஜ் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இதற்கு ஒரு எக்ஸ்டர்னல் டிஸ்க் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான இமேஜ் பேக் அப் புரோகிரம் தரப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தலாம். அல்லது Macrium Reflect Free / EASEUS Todo Backup என்ற புரோகிராம்களில் ஒன்றைப் பயன் படுத்தலாம். இரண்டுமே இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய புரோகிராம்களே.
இப்போது உங்கள் டேட்டா பைல்களை (டாகுமெண்ட், ஒர்க்புக், போட்டோ, படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள்) மாற்றுங்கள். புதிய கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள். புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்கள் இயங்கத் தொடங்குகையில்தான், பிரச்னைகள் இன்னும் என்ன என்று தெரியவரும். அப்போது முந்தைய கம்ப்யூட்டருக்குச் சென்று அதற்கான பைல்களை மாற்றுங்கள்.
நீங்கள் எக்ஸ்பி பயன்படுத்தியவராக இருந்து, பின்னர் விண்டோஸ் 7க்கு மாறியவராக இருப்பின், சில புரோகிராம்கள், விண்டோஸ் 7 இயக்கத்தில் இயங்க முடியாதவையாக இருப்பதனைக் கவனிக்கலாம். அந்த புரோகிராம் தளங்களுக்குச் சென்று அவற்றின் தன்மை குறித்து அறியவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம் பதிப்புகள் இருப்பின், அவற்றைப் பதியவும். அல்லது விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி மோட் வகையில் அவற்றை இயக்கி டேட்டா பைல்களை மாற்றவும்.

Post a Comment

0 Comments