நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!

ஞாபகம் சில பல நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வையோ அல்லது செய்த செயலையோ சரியாக நினைவில் வைத்திருந்து சொல்வது மிகவும் கடினமான ஒன்று. இது ஞாபக மறதிக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஒரு சிலர் இருக்கிறார்கள், முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை இப்போது கேட்டாலும் மிக துல்லியமாக நினைவு கூர்ந்து இம்மி பிசகாமல் அப்படியே விவரிப்பார்கள். இது நமக்கு பிரமிப்பாக இருக்கும். `உண்மையில் எவ்வளவு விஷயங்களை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்பதில் பெரிய விசேஷம் ஒன்றுமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தை சரியாக நினைவு கூர்ந்து எப்படி சொல்ல முடிகிறது என்பதுதான் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது’ என்கிறார் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் பிரைஸ் குல்.
பழைய நினைவுகளுக்கும் புதிய நினைவுகளுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் `நினைவுத்திறன்’ என்கிறது அறிவியல். நினைவுத்திறன் குறித்த முழு புரிதல் மற்றும் நினைவுத்திறன் குறைபாட்டினால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் குறித்து ஆய்வுகள் செய்யும் குல், புதிய நினைவுகளுக்கும் பழைய நினைவுகளுக்கும் இடையிலான போட்டியை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்காக, குல் மற்றும் அவருடைய ஆய்வுக் குழுவினர் 24 இளங்கலை மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் `ஒரு புகைப்படம் மற்றும் ஒரு வார்த்தை’ சேர்ந்த பல இணைகளை கொடுத்து அவற்றை வரிசையாக நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். அதன் பிறகு, கடைசியாக கொடுக்கப்பட்ட புகைப்படம், வார்த்தை இணை குறித்து விவரிக்கச் சொன்னார்கள். மாணவர் களுக்கு ஒரு நினைவை உருவாக்க, ஒரு முகம் அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு காட்சி, இவற்றுக்கு மேலே ஒரு சம்பந்தமில்லாத வார்த்தையை காண்பித்து நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். உதாரணமாக, அமெரிக்க அரசியல்வாதி `அல் கோரே’வின் புகைப்படத்துக்கு மேலே `நீச்சல்’ எனும் ஒரு வார்த்தை காண்பிக்கப்பட்டது (இது பழைய நினைவு).அதன்பிறகு, நீச்சல் எனும் வார்த்தைக்கு கீழே உள்ள அல் கோரேவின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அங்கு `க்ராண்ட் கேன்யான்’ எனும் பிரபல இடத்தின் புகைப்படம்/காட்சியை வைத்து நினைவு வைத்துக்கொள்ளச் சொன்னார்கள் (இது புதிய நினைவு). அதன்பிறகு, மூளையை ஸ்கேன் செய்யும் ஒரு ஸ்கேனருடன் மாணவர்களை இணைத்துவிட்டு, நீச்சல் எனும் வார்த்தையை அவர் களுக்கு காண்பித்து அதற்கு கீழே புதிய நினைவில் என்ன புகைப்படம் இருந்தது என்று கேட்டார்கள். மூளையின் குறிப்பிட்ட பாகங்கள் வெவ்வேறு வகையான புகைப்படங்களுக்கு (முகம்/காட்சி/பொருள்) ஏற்றவாறு எதிர்வினை செய்யக் கூடியவை. மூளை ஸ்கேன் தகவல்களை அடிப்படையாக வைத்து, ஒருவர் ஒரு முகத்தை அல்லது ஒரு காட்சியை அல்லது ஒரு பொருளை பார்க்கிறாரா என்பதை அறிய முடியும். மேலும் இந்த விவரத்திலிருந்து ஒருவருடைய புதிய மற்றும் பழைய நினைவுகளின் உறுதியை வரையறுத்துச் சொல்ல முடியும் என்கிறார் குல்.

இந்தப் பரிசோதனையில், ஒருவருடைய பழைய நினைவு தொடர்பான மூளைச் செயல்பாடு அதிகரித்தபோது அவரால் புதிய நினைவை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் புதிய நினைவை சரியாக ஞாபகம் வைத்துச் சொன்னபோதும் அவருடைய பழைய நினைவு இடையில் வந்து குறுக்கிட்டது கண்டறியப்பட்டது. ஒருவருடைய பழைய மற்றும் புதிய நினைவு ஆகிய இரண்டின் உறுதியும் சமமாக இருந்தபோது, அவர்கள் ஞாபகம் குறித்த கேள்விக்கான பதிலைச் சொல்ல நிறைய நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவர் தேவையில்லாத ஒரு விஷயத்தை மறக்க முயற்சி செய்கிறார்கள். புதிய நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சிக்கும்போது, தேவையில்லாத பழைய நினைவுகள் குறுக்கீடு செய்து நினைவுத் திறன் குறைபாடுகளை உருவாக்குகின்றனவா என்கிற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் டேவிட் பாத்ரே. ஆனால், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புதிய ஆய்வு முறையின் மூலம் இந்த நினைவுத் திறன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்கிறார் பாத்ரே. நினைவுத் திறன் குறைபாடுகள் இல்லாத, ஆரோக்கியமான இளங்கலை மாணவர்கள் மீதான இந்த ஆய்வு முறையை பயன்படுத்தி, நினைவுத் திறன் குறைபாடுள்ளவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிந்துகொள்ள முடியும். அதன்மூலம் நினைவுத் திறன் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வை கண்டறிந்துவிட முடியும் என்பது ஆய்வாளர் குல்லின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை? குல்லின் ஆய்வு முயற்சிகள் விரைவில் வெற்றி பெறட்டும்.

Post a Comment

0 Comments