எப்படி இருக்கு Samsung Galaxy S5

முந்தைய வடிவங்களுடன் ஒப்பிடும்போது, கேலக்ஸி S5ல் பெரிய புரட்சி எதுவும் இல்லை. சில சிறிய மாற்றங்கள், அதோடு உங்களுடைய ஃபோனைச் சாவியாகவும் கண்களாகவும் மாற்றக்கூடிய இரண்டு சென்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் எந்த அளவு வரவேற்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இந்த ஃபோனில் ஆண்ட்ராய்ட் கிட்கேட் வடிவம் உள்ளது. முந்தைய வடிவத்தைவிட 0.1 இஞ்ச் பெரிய (5.1 இஞ்ச்) திரை உள்ளது. மற்றபடி இந்த இரண்டுமே பார்ப்பதற்கு ஒரேமாதிரிதான் இருக்கின்றன. சொல்லப்போனால், முந்தைய வடிவத்தைவிடப் புதிய வடிவம் 15 கிராம் கனமானது, 0.2 மில்லி மீட்டர் தடிமனும் அதிகம்.

இந்த காலக்ஸி S5ல் அதி துல்லியமான “2K” திரையிடல் கிடைக்கும் என்று சொன்னார்கள். அது இல்லை. ஆனால் இதன் திரையில் மிகத் துல்லியமான படங்கள் கிடைப்பது உண்மைதான்.

2.5 GHz quad core processor இதில் பொருத்தப்பட்டுள்ளதால், அப்ளிகேஷன்கள் வேகமாக இயங்கும். இதன் கேமெராவும் 16 மெகாபிக்ஸல் அளவில் அருமையாக உள்ளது. 4G நெட்வொர்க்கிலும் இந்த ஃபோன் இயங்கும்.

‘ஏராளமான வாடிக்கையாளர்களுடன் பேசியபிறகுதான் இந்த ஃபோன் உருவாக்கப்பட்டுள்ளது’ என்கிறார் சாம்சங் ஆஸ்திரேலியாவின் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் அர்னோ லீனியர். ‘சிறப்பாக இயங்குகிற, தூசு படியாத, தண்ணீரால் கெடாத ஒரு ஃபோனை அவர்கள் கேட்டார்கள், நாங்கள் அதையே தந்துள்ளோம்!’

அடிக்கடி ஃபோனை சார்ஜ் செய்யும் வசதி இல்லாதவர்களுக்காக, இதில் Power Saving Mode ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்தால், திரை மங்கலாகி, கருப்பு வெள்ளையாகிவிடும், சில குறிப்பிட்ட அப்ளிகேஷன்கள்மட்டுமே இயங்கும். இதன்மூலம் ஃபோன் மூன்று முதல் எட்டு நாள்வரை சார்ஜ் ஆகாமல் செயல்படுமாம்!

கேமெராவிலும் சிறப்பு மாற்றங்கள் உண்டு. ஆட்டோ ஃபோகஸ் வசதி 0.3 விநாடிகளில் இயங்கி அசத்தும். ஒரே நேரத்தில் முன்னணி, பின்னணிக் காட்சிகளை இருவிதமான ஃபோட்டோக்களை எடுத்து, உங்களுக்குப் பிடித்த focusஐ வைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.

இதில் இணைக்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கானர்மூலம் Passwordகளைப் பயன்படுத்தாமல் ஃபோனை இயக்கலாம், PayPal ஒத்துழைப்புடன் பல இடங்களில் இதன்மூலம் பணம் செலுத்தலாம்.

இதேபோல், பயனாளரின் இதயத் துடிப்பை அளவிடும் சென்சர் ஒன்றும் கேமெரா அருகே பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் பயனாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Post a Comment

0 Comments