கடந்த 3 மாதங்களில் மட்டும் டெல்லியில் 1,120 குழந்தைகளை காணவில்லை

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 15-ம் தேதி வரை 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

தினமும் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் வரை காணாமல் போவதாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டோரை மீட்க முடியாமல் போவதாகவும் டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வீட்டுக்கு அருகில் விளையாடச் செல்வது, பள்ளிக்கு செல்வது எனப் பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் குழந்தைகள் வீடு திரும்பாவிட்டால் பெற்றோர்கள் படும் தவிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த வகையில் டெல்லியில் தற்போது அன்றாடம் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தொலைத்துவிட்டு தவித்து வருவதாக கூறப்படுகிறது.

புதிய ஆண்டு பிறந்து 3 மாதங்கள் கூட நிறைவுறாத நிலையில் கடந்த 15-ம் தேதி வரை டெல்லியில் 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளன. இதில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் அதாவது 621 பேர் தொலைந்து போயுள்ளனர்.

டெல்லி போலீஸார் தரும் புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் 7,572 குழந்தைகள் காணாமல் போயின. இதிலும் பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் (4,166) உள்ளன.

இதற்கு முன் 2013-ல் 5,809 குழந்தை களும், 2012-ல் 2,686 குழந்தைகளும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “பெண் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலியல் தொழிலில் இறக்கப்பட்டு விடுகின்ற னர். இவர்களை கடத்திச் செல்வதற் காகவே டெல்லியில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களின் தொடர்புகள் நாடு முழுவதிலும் பரவியிருப்பதால் இவர்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன” என்றனர்.

எனினும், காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டும் டெல்லி போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படு கின்றனர். இவர்கள் காணாமல் போவ தற்கு, பள்ளிக்குச் செல்ல விருப்ப மின்மை, குடும்பத் தகராறு உட்பட பல் வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

இந்தக் காரணங்களை கடந்த ஆண்டு டெல்லி போலீஸார் ஆராய்ந்த போது 10 சதவீதம் பேர் குடும்பத் தகராறால் காணாமல் போயுள்ளனர். 11 சதவீதம் பேர் வீட்டுக்கு அருகிலே யும், 9 சதவீதம் பேர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும்போது வழித வறியதாலும் தொலைந்துள்ளனர். 15 சதவீதம் பேர் ஏழ்மையாலும், 11 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்ல விரும்பாமலும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். மேலும் 8 சதவீதம் பேர் பெற்றோர் அடிப்பது மற்றும் திட்டுவதற்கு பயந்தும் எஞ்சி யவர்கள் பிற காரணங்களுக்காகவும் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது.

காணாமல்போகும் குழந்தைகளில் பெரும்பாலானோர் 8 வயதுக்கும் குறைவாக இருப்பது டெல்லி போலீஸாரை கவலை அடையச் செய்கிறது. ஏனெனில், கடந்த ஆண்டு காணாமல் போய் மீட்கப்படாத 749 குழந்தைகளின் வயது 12-க்கும் குறைவாகும்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மாநில காவல்துறை இணை ஆணையர் ரவீந்திரா சிங் யாதவ் கூறும்போது, “காணாமல் போனவர் களின் புகார்கள் மீது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை டெல்லி நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இப் புகார்களில் எங்களுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தீவிர தேடலில் ஈடுபடுகின்றன. இதற்காக ‘ஆபரேஷன் மிலாப் (மீண்டும் இணைவதற்கான நடவடிக்கை)’ என்ற பெயருடன் தனி போலீஸ் படை இயங்கி வருகிறது” என்றார்.

கடத்தலில் சம்பல் கொள்ளைக்காரர்கள் 

கடந்த 5 ஆண்டுகள் வரை டெல்லி கிரிமினல்களால் கடத்தப்படும் குழந்தைகளில் குறிப்பிட்ட சிலரை சம்பல் கொள்ளையர்களிடம் ஒப்படைக்கும் வழக்கம் இருந்தது. பிணையத் தொகை கிடைத்தவுடன் அக்குழந்தைகளை சம்பல் கொள்ளைக்காரர்கள் தாங்கள் மறைத்து வைத்திருக்கும் உ.பி., ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விடுவிக்கும் வழக்கம் இருந்தது. பிணையத்தொகை கொடுக்க இயலாதவர்கள் அந்தக் கும்பலுடனே இணைந்து கொள்ளையர்களாகி விடுவது உண்டு. இந்த வகையில் ‘உ.பி.யின் வீரப்பன்’ என்று அழைக்கப்பட்ட பிரபல சம்பல் கொள்ளையன் தத்துவா, சுமார் 20 வருடங்களுக்கு முன் டெல்லியில் கடத்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் மகனை தனது கும்பலின் அடுத்த தலைவனாக அறிவித்திருந்தார். 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த தத்துவா ஜூலை 23, 2007-ல் உ.பி. போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டான். சரணைடைந்த தத்துவாவின் வாரிசு உபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments