யு.எஸ்.பி. டைப் சி பற்றி தெரியுமா...

 
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யு.எஸ்.பி. டைப் சி போர்ட் தரப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தவுடன், பலரும் இது குறித்து
தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். முதன் முதலில் ஆப்பிள் நிறுவனக் கம்ப்யூட்டரில் இது வந்தாலும், இந்த வகை யு.எஸ்.பி. போர்ட், ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட வடிவமைப்பு இல்லை. யு.எஸ்.பி. பயன்பாட்டில், இது ஒரு புதிய கட்டமைப்பினையும் செயல்முறையினையும் கொண்டுள்ளது. இது விரைவில், தற்போது யு.எஸ்.பி. பயன்படுத்தப்படும் அனைத்து சாதனங்களிலும், பழைய முறை வடிவமைப்பின் இடத்தில் இடம் பெறும். 

யு.எஸ்.பி. சி வகை என்பது, பல புதிய வரையறையுடன் இணைந்ததாகவே இருக்கும். எடுத்துக் காட்டாக, வேகமாக இயங்கு திறனும், மின்சக்தி வழங்கும் திறனும் கொண்ட யு.எஸ்.பி. 3.1 போன்றவற்றுடன் இணைந்ததாகவே இருக்கும். 

யு.எஸ்.பி. சி வகை ஒரு புதிய சிறிய இணைப்பாகும். இந்த இணைப்பு, தற்போது வந்திருக்கும் புதிய யு.எஸ்.பி. 3.1 மற்றும் யு.எஸ்.பி. பி.டி. (USB power delivery) ஆகியவற்றுடனும் செயல்படும். இப்போது நமக்கு நன்கு அறிமுகமாகி உள்ள யு.எஸ்.பி. டைப் ஏ (USB Type-A). நாம் யு.எஸ்.பி. 1 யு.எஸ்.பி. 2 மற்றும் 3 என முன்னேறி வந்தாலும், யு.எஸ்.பி. கனெக்டர் அப்படியேதான் உள்ளது. உலகெங்கும் பயன்படுத்தப்படும் அனைத்து யு.எஸ்.பி. கனெக்டர்களும் ஒரே மாதிரியாக, ஒரே ஒரு வழியில் மட்டும் இணைக்கப்படக் கூடியதாக உள்ளது. எனவே தான், யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும்போது, சரியாக அதனைப் பொருத்தும் வகையில் இணைக்கின்றோமா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
ஆனால், மற்ற டிஜிட்டல் சாதனங்களும் யு.எஸ்.பி.யைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டன. ஸ்மார்ட் போன், டிஜிட்டல் கேமரா, கேம் கண்ட்ரோலர் எனப் பல சாதனங்களில் யு.எஸ்.பி. போர்ட் அமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், புதிய கனெக்டர் வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை மைக்ரோ மற்றும் மினி யு.எஸ்.பி. கனெக்டர் என அழைக்கப்பட்டன. 

இந்த சூழ்நிலை தற்போது மாற இருக்கிறது. பல்வேறு சாதனங்களில் பொருத்துவதற்காக, பல வகைகளில் வடிவமைக்கப்பட்ட யு.எஸ்.பி. கனெக்டர்கள் இனி ஒரு முடிவுக்கு வரும். தற்போது வரும் யு.எஸ்.பி. சி வகை கனெக்டர் என்பது மிகச் சிறிய ஒன்றாக இருக்கும். பழைய யு.எஸ்.பி. டைப் ஏ ப்ளக்கின் அளவில், மூன்றில் ஒரு பங்காகவே அமையும். அனைத்து வகை சாதனங்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த ஒரு கனெக்டர் அமையும். நீங்கள் வெளியாக இணைக்கக் கூடிய ஹார்ட் ட்ரைவாக இருந்தாலும், அல்லது யு.எஸ்.பி. சார்ஜரைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்திடுவதாக இருந்தாலும், ஒரே ஒரு கேபிளைப் பயன்படுத்தி இந்த கனெக்டரைப் பயன்படுத்தலாம். இந்த சிறிய கனெக்டர் அனைத்து வகை சாதனங்களிலும் இணைக்கப்படும் வகையில் செயல்படும். இந்த கேபிளின் இரு முனைகளிலும் யு.எஸ்.பி. சி வகை கனெக்டர்கள் இருக்கும். இதனை எந்த புறத்திலும், மேல் கீழாக மாற்றியும் இணைக்கலாம். இனி அனைத்து சாதனங்களும், இதில் இணைக்கப்படும் வகையில் போர்ட்களைக் கொண்டிருக்கும். பலவகை யு.எஸ்.பி. கேபிள்கள், வெவ்வேறு வகையான கனெக்டர்கள் என்று நாம் தேடிப் பயன்படுத்த வேண்டியதில்லை. சிறிய சாதனங்களில் கூட, பெரிய அளவிலான யு.எஸ்.பி. போர்ட்களைக் கொண்டு வடிவமைக்க வேண்டியதில்லை.

யு.எஸ்.பி. சி வகை போர்ட்கள் பலவகையான வழிமுறைகளைக் கொண்டதாக இருக்கும். அந்த ஒரே ஒரு போர்ட்டில், எச்.டி.எம்.ஐ., வி.ஜி.ஏ., டிஸ்பிளே போர்ட் என அனைத்து வகைகளையும் இணைக்கலாம். தற்போது வந்துள்ள ஆப்பிள் மேக் கம்ப்யூட்டரில் உள்ள புதிய வகை போர்ட் இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.

யு.எஸ்.பி. வழி மின்சக்தி: தற்போதுள்ள யு.எஸ்.பி. பவர் டெலிவரி வரையறையும், யு.எஸ்.பி. சி வகைக்கு இணைவானதாகவே உள்ளது. தற்போது, ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. மற்றும் பல மொபைல் சாதனங்கள், யு.எஸ்.பி. இணைப்பு வழியாகவே சார்ஜ் செய்யப்படுகின்றன. யு.எஸ்.பி. 2 வகை மூலம், தற்போது 2.5 வாட்ஸ் மின் சக்தி மாற்றப்படுகிறது. இதன் மூலம் நம் மொபைல் போன்கள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இதில் 100 வாட்ஸ் வரை மின்சக்தி பரிமாறிக் கொள்ளலாம். இது இரு வழிப் பாதை கொண்டதாகும். மின்சக்தியை அனுப்பவும், பெறவும் முடியும். அதே போல, மின்சக்தி பரிமாற்றத்தின் போதே, டேட்டாவும் பரிமாறிக் கொள்ள இயலும். 

யு.எஸ்.பி. சி வகை மற்றும் யு.எஸ்.பி. 3.1.: யு.எஸ்.பி. 3.1 என்பது ஒரு புதிய வகை யு.எஸ்.பி. வரையறை. யு.எஸ்.பி. 3 என்பது, கொள்கை அளவில் 5 ஜி.பி.பி.எஸ். அளவில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளக் கூடியதாகும். யு.எஸ்.பி. 3.1, இந்த வகையில் 10 ஜி.பி.பி.எஸ். (Gbps கிகா பிட்ஸ் ஒரு விநாடியில்) டேட்டாவினைக் கடத்தும். பழைய யு.எஸ்.பி. கனெக்டர்களை, யு.எஸ்.பி. சி வகை போர்ட்களில் இணைக்க முடியாது. இதற்காக, நாம் பழைய சாதனங்களில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்களைப் பயன்படுத்த முடியாது என்ற முடிவிற்கு வரக் கூடாது. தற்போது புதியதாக வந்திருக்கும் யு.எஸ்.பி. 3.1. பழைய வகை யு.எஸ்.பி. இணைப்புகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இயங்குகின்றது. எனவே, புதிய வகை சி போர்ட்களில் இணைக்க, பழைய சாதனங்களுக்கு ஒரு அடாப்டர் தேவைப்படும்.

எனவே, இனி அண்மைக் காலங்களில் வரும் கம்ப்யூட்டர்கள், சிறிய யு.எஸ்.பி. சி வகை போர்ட் மற்றும் பழைய வகை யு.எஸ்.பி. போர்ட் என இரு வகைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் என எதிர்பார்க்கலாம். அல்லது, தற்போது வந்திருக்கும் ஆப்பிள் மேக் புதிய கம்ப்யூட்டர் போல, யு.எஸ்.பி. சி வகை போர்ட் மட்டும் இருந்தால், நமக்குத் தேவையான அடாப்டர் மூலம், சாதனங்களை இணைத்துப் பயன்படுத்தலாம். 

யு.எஸ்.பி. சி வகை என்பது, இந்த வகைப் பயன்பாட்டில், நல்ல முன்னேற்றத்தையே காட்டுகிறது. முதன் முதலாக, ஆப்பிள் நிறுவனத்தின், புதிய மேக் புக் கம்ப்யூட்டரில் தன் அறிமுகத்தினை மேற்கொண்டுள்ளது. ஆனால், இது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்பம் என யாரும் எண்ணத் தேவை இல்லை. வரும் நாட்களில் அறிமுகமாகக் கூடிய அனைத்து நிறுவனத்தின் சாதனங்களிலும் இது நிச்சயம் இடம் பெறும். 

தற்போது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் வழங்கும், லைட்னிங் கனெக்டர் கூட, யு.எஸ்.பி. சி வகை போர்ட்கள் கொண்டு மாற்றப்படலாம். மற்ற கனெக்டர்களுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் தரும் லைட்னிங் கனெக்டர், புதிய வசதி அல்லது பயன்பாட்டினைத் தரவில்லை. மேலும், அது ஆப்பிள் நிறுவனத்திற்கே சொந்தமான தயாரிப்பு என்பதால், மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த, உரிமக் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். எனவே, இதனை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால், அனைவரும் புதிய யு.எஸ்.பி. சி வகை போர்ட் மற்றும் கனெக்டர் பயன்படுத்துகையில், ஆப்பிள் நிறுவனமும் தன் லைட்னிங் கனெக்டரை மாற்றிக் கொள்ளலாம்.

கூகுள் தான் கொண்டு வர இருக்கும் ஆண்ட்ராய்ட் போன்களில், இந்த யு.எஸ்.பி.சி வகை போர்ட்டினை அமைத்துத் தர இருப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில், கூகுள் வெளியிட்ட புதிய குரோம் புக் சாதனத்தில் இந்த போர்ட் இணைத்துத் தரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments