வாட்ஸ் அப்பில் வெளிவந்த பின்னரும் பெண் போலீசார் ஏமாந்தனர்


டெபிட், கிரெடிட் கார்டுதாரர்களை நூதன முறையில் ஏமாற்றி பணத்தை கையாடல் செய்யும் கும்பலை சேர்ந்த மோசடி ஆசாமி ஒருவன் வாடிக்கையாளரை ஏமாற்ற முயற்சிக்கும் உரையாடல் வாட்ஸ் அப்பில் வந்த பின்னரும் அவன் கடந்த சில நாட்களில் மட்டும் 5க்கும் மேற்பட்ட பெண் போலீசாரை ஏமாற்றியுள்ளான். இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் பல்வேறு வங்கிகள் எஸ்எம்எஸ், இமெயில் மற்றும் பல்வேறு அறிக்கைகள் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மோசடி குறித்து எச்சரிக்கிறது. மேலும் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் உள்ளிட்ட எந்த எண்ணையும் வாடிக்கையாளர்களிடம் வங்கி நிர்வாகம் கேட்காது என்று எச்சரிக்கின்றனர். ஆனால், படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை பலத் தரப்பினரும் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்வதில்லை. ஆனால், ஏமாந்த பிறகு வங்கி மற்றும் போலீஸ் நிலையங்களில் ஏறி இறங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடந்த வங்கி மோசடி குறித்த வாட்ஸ் அப் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வாடிக்கையாளர் ஒருவரை எப்படி ஏமாற்ற முயற்சி நடக்கிறது அதை அவர் சாமர்த்தியமாக எப்படி கேள்வி கேட்டு முறியடிக்கிறார் என தெரிய வருகிறது.

ஏடிஎம் ஹெல்ப்லைனிலிருந்து பேங்க் மேனேஜர் பேசுகிறேன் உங்க ஏடிஎம் கார்டு ரினியூவல் பண்ணனும், இன்று மாலையோடு உங்கள் கார்டு கெடு முடிந்து விடுகிறது,  மாஸ்டர் கார்டு, விசா கார்டு எல்லா கார்டும் இன்றோடு முடியுது சார். எல்லா கார்டையும் ரினியூவல் பண்ணனும் இல்லன்னா கார்டு காலாவதியாயிடும். அதன் பிறகு கார்டு வாங்க நீங்க புதிதாகத்தான் விண்ணப்பிக்கணும். ரினியூவல் இல்லன்னா கார்டு காலாவதி ஆகிவிடும். நான் உங்களுக்கு உதவி செய்றேன், கார்டு மேல் இருக்கும் 16 இலக்க எண்ணை சொல்லுங்கள் என சாமர்த்தியமாக கேட்கிறார். ஆனால் உஷாரான வாடிக்கையாளர் நீங்கள் என் பெயரை அல்லது அக்கவுண்ட் நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டவுடன் அந்த ஆசாமி போனை வைத்து விடுகிறான். இந்த தகவல் வாட்ஸ்அப்பில் பரவி இது போல் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை உலாவியது.

ஆனாலும் அந்த மோசடி ஆசாமி தனது செயலை நிறுத்தவில்லை. சென்னை காவல் துறையில் உள்ள சியூஜி எண்ணில் உள்ள பெண் போலீசார் செல்போன் எண்களை மட்டும் எடுத்து மேலே குறிப்பிட்டுள்ளது போல் பேசியுள்ளான். இதில் பல பெண் போலீசார் எங்கே தங்களது ஏடிஎம் கார்டு காலாவதி ஆகிவிடுமோ என பயந்து கார்டு நம்பரை கூறியுள்ளனர். இதில் மேற்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு பெண் காவலர் நம்பரை சொன்னவுடன் ரூ.12 ஆயிரம் அவரது அக்கவுண்டிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. சில பெண் போலீசார் அவனது மோசடி அறிந்து கேள்வி கேட்டால் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறான். அவனது போன் நம்பரை போலீசார் எடுத்துவிட்டனர். இது பற்றி மேலதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவனது போன் நம்பரை (09631064316) போலீசார் தங்களுக்குள் பரிமாறி உஷாராக இருக்கும் படி தகவல் அனுப்பி வருகின்றனர்.

Post a Comment

0 Comments