மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் !!!

மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவது இன்றுமுதல் நிறுத்தப் பட்டுள்ளது.

நுகர்வோருக்கு மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் கடந்த 1964-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் முறைகேடுகளை தடுப்பதற்காக காஸ் மானிய தொகையை நுகர்வோரின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 14 கோடியே 84 லட்சம் நுகர்வோர்களில் 12 கோடியே 25 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு முன்பணம் மற்றும் மானிய தொகையாக ரூ. 5 ஆயிரத்து 243 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 52 லட்சம் வாடிக்கை யாளர்களில் 1 கோடியே 30 லட்சம் பேர் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு முன்பணம் மற்றும் மானிய தொகை சேர்த்து ரூ.545 கோடி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சேருவதற்காக படிவங்களை கொடுத்து காத்திருப் போர் எண்ணிக்கை 36 ஆயிரமாக உள்ளது. 21 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்போது வரை இத்திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.

இத்திட்டத்தில் சேர மார்ச் 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதுவரையில் இத்திட்டத்தில் சேர்ந்த வர்களுக்கு சந்தை விலையில் சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு, மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. திட்டத்தில் சேராதவர்களுக்கு மானிய விலையிலேயே சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.

திட்டத்தில் சேரும் காலக்கெடு (மார்ச் 31 வரை) முடிவடைந்தால் மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த நடைமுறை நேற்றுடன் முடிவு பெற்றது.

இதன் காரணமாக இன்று முதல் நுகர்வோர் மானிய விலையில் (404 ரூபாய் 50 காசுகள்) சிலிண்டர்களை பெற முடியாது. அதற்கு பதிலாக சந்தை விலையில்தான் (605 ரூபாய் 50 காசுகள்) சிலிண்டர்களை பெற முடியும். இத்திட்டத்தில் இன்னும் சேராத நுகர்வோர் எப்போது வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் மானியத் தொகையை பெற மேலும் ஒரு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் வரை இழப்பு இல்லை 

அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் திட்டத்தில் இணையும் நுகர்வோருக்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை சிலிண்டர்கள் வாங்கியுள்ளனரோ அதற்கான மானியத் தொகை திட்டத்தில் சேர்ந்த வுடன் வங்கிக் கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும்.

ஜூன் மாதத்துக்குப் பிறகு இணையும் நுகர்வோர்களுக்கு அதற்கு முந்தைய மாதங்களில் வாங்கிய சிலிண்டர்களுக்கான மானிய தொகை கிடைக்காது.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் இணைந்த நுகர்வோர்களுக்கு இனிமேல் மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திட்டத்தில் இணையாமல் உள்ளவர்கள் இனிவரும் நாட்களில் சந்தை விலையில்தான் சிலிண்டர்களை வாங்க வேண்டும்.

நுகர்வோர்கள் அவர்களுடைய காஸ் ஏஜென்சிகளில் நேரடி எரிவாயு மானிய படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும். படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த 3 நாட்களில் இத்திட்டத்தில் இணைய முடியும்” என்றார்.

Post a Comment

0 Comments