டாக்டர் கலாமின் சுவாரசியமான தகவல்


குருவாயூரப்பன், நலமா இது டாக்டர் கலாம் திருவனந்தபுரத்தில் ஒரு சாதாரண ஓட்டல் உரிமையாளரிடம் உரிமையோடு கேட்ட கேள்வி. ஆம், ஓட்டல் பெயரிலேயே அதன் உரிமையாளரை அழைத்து உரிமை கொண்டாடியவர் டாக்டர் கலாம்.



டாக்டர் கலாம் திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி.யில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் தம்பானுார் காந்தாரியம்மன் கோயில் பக்கம் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். அதன் பக்கத்தில் ஒரு சிறிய ஓட்டல் உண்டு. அதன் பெயர் குருவாயூரப்பன் ஓட்டல். அதை பரமேஸ்வரன் நாயர் என்பவர் இன்னும் நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த ஓட்டலில்தான் டாக்டர் கலாம் அன்று உணவு சாப்பிட்டது.அது பற்றி பரமேஸ்வரன் நாயர் இப்படி கூறுகிறார்: காலையில் இரண்டு ஆப்பம், ஒரு கப் பால், மதியம் சாதம், தயிர், கூட்டு எடுத்துக்கொள்வார். இரவு சில நாட்கள்தான் சாப்பிடுவார். சில நாட்களில் சாப்பிட்டு விட்டு சிந்தனையில் அப்படியே சென்று விடுவார். நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். அடுத்த நாள் வந்து நினைவோடு அந்த பணத்தை தந்து விடுவார். அவர் அறையில் புத்தகங்கள் நிறைந்திருக்கும். யாராவது சென்றால் இருக்க கூட இடம் இருக்காது.

காலங்கள் உருண்டன. அவர் ஜனாதிபதி ஆன பின் ஒரு முறை திருவனந்தபுரம் வந்த போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ஒரு பூங்கொத்துடன் சென்றேன். பாதுகாப்பு அதிகாரிகள் என்னை அவர் அருகில் செல்லவிடவில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் கையை துாக்கி காட்டினேன். என்னை பார்த்து விட்ட அவர் என்னை அருகில் அழைத்தார். நான் மரியாதையாக பூங்கொத்தை கொடுத்தேன். 'என்ன குருவாயூரப்பா சவுக்கியமா, சுகமா' என்று அன்போடு கேட்டார்.என்னை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று மனைவி லலிதாம்பிகையுடன் சென்றேன். எங்களுக்கு அவர் விருந்தளித்தார். அவர் ஆசையாக அணியும் நீல நிற உடை எடுத்து சென்றோம். அதை வாங்கி விட்டு எங்களிடமே தந்து விட்டார்.அவர் மறைந்தார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Thanks : dinamalar

Post a Comment

0 Comments