ஏவுகணை மூலம் மல்லிகைப்பூவை அனுப்பி சமாதானமும் செய்யலாம்’ அப்துல்கலாமின் வார்த்தையை நினைவுகூர்ந்த நேர்முக உதவியாளர்




‘ஏவுகணை மூலம் அணு ஆயுதம் மட்டுமல்ல, மல்லிகைப் பூவை அனுப்பி சமாதானமும் செய்யலாம்’ என்று அப்துல்கலாம் அடிக்கடி கூறியதை அவரது நேர்முக உதவியாளர் நினைவுகூர்ந்தார்.

அப்துல்கலாமின் உதவியாளர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கவுரவ பேராசிரியராக பணியாற்றியபோது அவருக்கு பல்கலைக்கழகம் சார்பில் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டவர் எஸ்.பாபு. அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் எஸ்.பாபு பேசியதாவது:-

மாணவர்களின் உயர்வையும், நம் தேசத்தின் உயர்வையும் எப்போதும் நினைத்து 84 வயதிலும் ஓய்வின்றி உழைத்த அப்துல்கலாமின் இழப்பு நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தினசரி காலை 4½ மணிக்கு எழுந்து பகவத்கீதை, குரான் படிப்பார். 5 மணி முதல் 6½ மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுவார். 

அப்போது மாணவர்கள் குறுக்கிட்டு சந்தேகங்களை கேட்டால் உடனடியாக பதிலளிப்பார். பாதுகாவலர்கள் தடுத்தாலும், மாணவர்கள் கேள்வி கேட்பதை தடுக்காதீர்கள் என்று கூறுவார்.

ஏவுகணை

ஏவுகணை மூலம் அணு ஆயுதங்களையும் அனுப்ப முடியும், சமாதானத்துக்காக மல்லிகைப் பூவையும் அனுப்ப முடியும் என்று அடிக்கடி மாணவர்களிடம் அவர் கூறுவார். காலை உணவை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் அவருக்கான அறைக்கு சென்று பணியாற்றுவார். சில நேரங்களில் பகல் உணவை கூட சாப்பிடமாட்டார். தொடர்ந்து இரவு 12 மணி வரை பணியாற்றுவார். 

பல்கலைக்கழக விருந்தினர் அறையில் அப்துல்கலாம் தங்கியிருந்தபோது தான், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தொலைபேசியில் ‘நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளீர்கள்’ என்ற செய்தியை கூறினார். அதற்கு அவர் தன்னுடன் பணியாற்றும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், நண்பர்கள், உறவினர்களுடன் கலந்துபேசி பின்னர் அறிவிப்பதாக கூறினார். அதனை நினைக்கும்போது இப்போதும் எங்களுக்கு மெய்சிலிர்க்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

எளிமையான மனிதர்

அப்துல் கலாமின் கார் ஓட்டுனர் வி.பாலாஜி கூறும்போது, ‘‘மிகவும் எளிமையான மாபெரும் விஞ்ஞானியை நாம் இழந்துவிட்டோம். அவருடன் 11 மாதங்கள் கார் ஓட்டுனராக பணியாற்றிய அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அங்கமாகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, சாலை விதிகளை மதிப்பது போன்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்’’ என்றார்.

பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஜோதி கூறும்போது, ‘‘அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தை படித்து தான் அவரை போன்று ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில், தற்போது ஆராய்ச்சி துறையில் மாணவியாக பயின்று வருகிறேன். அவர் நம்மிடம் தான் வாழ்ந்து வருகிறார்’’ என்றார்.

ஆராய்ச்சி மாணவர் ஜெனீக்ஸ் ரினோ உள்ளிட்ட சிலர் அப்துல்கலாம் மறைவையொட்டி கவிதைகளை வாசித்தனர்.

Post a Comment

0 Comments