எண்ணெய்… சுட்ட எண்ணெய்… – தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

‘சுட்ட எண்ணெயைத் தொடாதே, வறுத்த பயறை விடாதே’ என்பது நம் முன்னோர் வழக்கு. இன்று நாம் எண்ணெயைப் பார்த்து பயப்படும் அளவுக்கு, நம் முன்னோர்கள் பயந்ததில்லை. காரணம்… அவர்கள் பயன்படுத்திய எண்ணெ யின் தூய்மை, தரம்!  

மரச்செக்கிலோ அல்லது கல் செக்கிலோ ஆட்டி எடுத்த எண்ணெயில் மணமும் நிறமும் அடர்த்தியாக இருக்கும். சமையலுக்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும். பாரம்பர்ய சமையல்படி நாம் சமைக்கும் மற்றும் தாளிக்கும் எண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்க்கும்போது, எண்ணெயில் இருக்கும் நச்சை நீக்கி அதைத் தூய்மையாக்குவதோடு, எளிதில் ஜீரணமாகும் நிலைக்கும் மாற்றுகிறது.

“இன்று, பளபளப்பாக, மணமாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவது ஒருபுறம் என்றால், ‘ரீஃபைண்ட்’ என்கிற பெயரில் எண்ணெயின் சத்துகள் அனைத்தும் அதற்கான வேதிமுறைக்கு உட்படுகையில் நீக்கப்படுவது இன்னொரு கொடுமை. இதனால் ஜீரணக் கோளாறுகள் தொடங்கி, முக்கிய ஆரோக்கியக்கேடுகள் அனைத்துக்கும் அஸ்திவாரம் போடப்படுகிறது. இந்த விளைவுகள் போதாது என்று, ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, சிக்கல்கள் இன்னும் பெருகிப்போகின்றன!” என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்களும் துறை சார்ந்த நிபுணர்களும்.

எண்ணெயின் மூலக்கூறு மாற்றம்!

“எண்ணெயின் மூலக்கூறுகள், அதை ஒருமுறை பொரிக்கப் பயன்படுத்திய பிறகு மாற்றம் அடைந்திருக்கும். அதே எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தும்போது, எண்ணெயின் மூலக்கூறுகள் பிரிந்து, உணவில் கலந்து, ஜீரணக் கோளாறு ஏற்படுத்துவது மட்டுமின்றி, உடலில் உள்ள செல்களில் மாற்றத்தை உண்டாக்கி, புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணியாகும் அளவுக்கு ஆபத்துடையவையாக மாறுகின்றன. எனவே, ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது, மிகவும் தவறானது” என்றும் உஷார்படுத்துகிறார்கள் அவர்கள்.

அந்த வகையில் அப்பளம், பூரி, பஜ்ஜி மற்றும் அசைவ உணவுகளை, வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி தயாரிப்பது  ஆபத்தை விளைவிக்கக்கூடியது. உணவகங்கள் சிலவற்றில் தயாரிக்கப்படும் எண்ணெய் தின்பண்டங்கள், இப்படி ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிச் செய்யப்படலாம். இதை அறிந்தும் சிலர் இப்பழக்கத்தை வழக்க மாகக் கொள்வதால், அவர்கள் வாழ்க்கையில் பல ஆரோக்கியக்கேடுகளுக்கு அறிந்தும் வழி வகுக்கிறார்கள் என்பதே உண்மை. இதிலிருந்து தப்பிக்க இதோ சில அனுபவ ஆலோசனைகள்…

சுட்ட எண்ணெய்… உணவல்லாத மறுபயன்பாடு! 

சுட்ட எண்ணெயை சாப்பாடு தவிர்த்து பல வெளிப்புறப் பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம்.  

* பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை திறந்துவைக்காமல், ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றிப் பாதுகாக்கவும். பாட்டிலை நன்கு இறுக்கி மூடாமல் லேசாக மூடிவைக்கலாம். இல்லாவிட்டால், திறந்தவுடன் உபயோகிக்க முடியாத அளவுக்கு வாசனை வந்துவிடும். சுட்ட எண்ணெயை அதிக நாட்கள் வைத்திராமல் ஒரு வாரத்துக்குள் உபயோகிக்க வேண்டும்.

* தையல் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற அனுதினம் பயன்படுத்தும் பொருட்களின் உராய்வு, பழுதைத் தவிர்க்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.  

* இரும்புப் பொருட்களான கத்தி, கத்தரிக்கோல், இரும்புக் கடாய் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு நன்கு கழுவி துணியால் துடைத்து சுத்தம் செய்து ஈரம் நீங்க காயவைத்த பின், இந்த எண்ணெயை தடவிவைத்தால், துரு பிடிக்காமல் இருக்கும். 

* வீட்டு நுழைவு கேட், வாசல் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து மூடும்போது ஏற்படும் உராய்வு சத்தத்தை நீக்க இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். மரக்கதவுகளை தண்ணீர்விட்டு சுத்தம் செய்தால் ஊறி உதிர்ந்துவிடும் என்பதால், துணியால் துடைத்து சுத்தம் செய்தபின் பஞ்சு அல்லது டஸ்டரில் லேசாக இந்த எண்ணெயைத் தொட்டு கதவைத் துடைக்க, பளபளவென இருக்கும்.

*  துருப்பிடித்த அல்லது பழைய பூட்டு எளிதில் திறக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

* கருணைக்கிழங்கில் அரிப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ளதால், அதன் தோல் சீவுவதற்கு முன்பு இந்த எண்ணெயை கைகளில் பூசிக்கொள்ள அரிப்பைத் தவிர்க்கலாம். 

* பால்கனியில், வாசலில் தொங்கும் மண் பூந்தொட்டிகளில், பஞ்சில் இந்த எண்ணெயைத் தொட்டுப் பூச, பளபளவென இருக்கும்.

* ஒரு காகிதத்தில் இந்த எண்ணெயைத் தடவி மின்சார விளக் கில் கட்டித்தொங்கவிட, மாலை நேரங்களில் விளக்கு வெளிச்சத்துக்கு வரும் ஈசல் உள்ளிட்ட பூச்சிகள் இதில் ஒட்டிக்கொள்ளும். அவற்றை அப்புறப்படுத்துவதும் எளிமையாக இருக்கும். 

* மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் இந்த எண்ணெயில் விளக்கேற்றிப் பயன்படுத்தலாம்.


* வயதானவர்களுக்கு கால் பெருவிரலின் நகம் தடித்து வெட்டமுடியாமல், அதன் உள்ளே அழுக்கு சேர்ந்து அரிப்பு ஏற்படும். அவர்களுக்கு இந்த எண்ணெயை விட்டு மசாஜ் செய்து ஊறவைக்க, நகங்கள் மிருதுவாகி வெட்ட சுலபமாகும் என்பதுடன் அழுக்கையும் எளிதில் நீக்க முடியும். 

மேற்சொன்ன குறிப்புகள் எல்லாம் அப்பளம், பூரி, பஜ்ஜி என சைவ உணவுக்குப் பயன்படுத்திய எண்ணெய்க்கு மட்டுமே. அசைவ உணவுகளான கடல் உணவுகள் மற்றும் இறைச்சி உணவுகள் பொரித்த எண்ணெய், இந்த வெளிப்புறப் பயன்பாடுகளுக்கு ஏற்றதல்ல. அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடுவதே நல்லது.

எண்ணெய்… ஆரோக்கியம் வளர்க்கவா அல்லது குறைக்கவா என்பது அதைப் பயன்படுத்தும் அளவிலும் முறையிலுமே உள்ளது! 


எண்ணெயைப் பாதுகாக்கும் முறைகள்!

* பிளாஸ்டிக் பாட்டில், டப்பாக்களில் எண்ணெயைச் சேமிப்பதைத் தவிர்க்கவும். காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலே சிறந்தது. 

* அடுப்புக்குப் பக்கத்தில் எண்ணெய் பாட்டில் அல்லது பாத்திரங்களை வைப்பதைத் தவிர்க்கலாம்.

* நெய்யை சமையலுக்கோ, சாப்பாட்டுக்கோ உருக்கித்தான் பயன்படுத்த வேண்டும், நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. 

* எண்ணெயை புகை வரும்வரை சூடாக்கி பின் தாளிப்பதோ பொரிப்பதோ கூடாது. இதனால் உணவு தீய்ந்துபோவதுடன் அதன் மணம் கெட்டுவிடுவதோடு, அந்த எண்ணெயால் கிடைக்கும் பயனும் இல்லாமல் போய்விடும்.

Post a Comment

0 Comments