இளநீர் வாங்கப் போறீங்களா..?


வெயில் நேரத்தில் இளநீர் கடையைக் கடக்கும்போது, கால்கள் தானாக பிரேக் போடும். கடைக்காரர் சொல்லும் விலையைக் கேட்டு தவித்துப்போவோம். அந்த விலைக்கு ஏற்ற தரம் இருந்துவிட்டால், காசைப் பற்றி கவலையில்லை. எனவே, இளநீர் வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களைக் கேட்டோம், வண்டலூர் இளநீர் வியாபாரி குமாரிடம்.
 
தண்ணிக்கு ஏத்த ரேட்டு!

‘‘இளநீர் விலை 20 ரூபாய், 30 ரூபாய், 40 ரூபாய்னு மாறுபடும். அது, அந்த எந்த ஊரு காய்ங்கிறதைப் பொறுத்தது. உதாரணமா, பாண்டிச்சேரியில இருந்து வர்ற காய்ல தண்ணி கம்மியா இருக்கும், ரேட்டும் கம்மியா இருக்கும். பொள்ளாச்சி, தேனி மாதிரியான ஊர்கள்ல இருந்து வர்ற காய்ல தண்ணி நிறைய இருக்கும், அதுக்கு ரேட்டும் ஜாஸ்தி. 

தண்ணியா… தேங்காயா?

இளநீருக்குள்ள தண்ணி நிறைய இருக்கா, இல்ல தேங்காயா இருக்காங்கிறதை வெளிமட்டைய வெச்சே கண்டுபிடிச்சுடலாம். தண்ணி நிறைய இருந்தா, மட்டை பளபளன்னு இருக்கும்; காயா இருந்தா சொரசொரப்பா இருக்கும். 

புளிப்பா, இனிப்பா?

காய் இனிப்பா வேணும்னு நினைக்கும் போது சில சமயம் புளிப்பா அமைஞ்சுடும். வழுக்கை இல்லாம அல்லது கொஞ்சம் வழுக்கையா இருக்கிற காய்ல தண்ணி புளிக்காது. வழுக்கை நிறைய இருந்தா, தண்ணியில இனிப்பு குறைஞ்சி புளிப்பு கூடிரும்.

ஆட்டிப் பார்க்கலாம்! 

தேங்காயைப் பொறுத்த வரைக்கும், ஆட்டிப் பார்க்கும் போது ஆடினா அது நல்ல காய்னு அர்த்தம். அதுவே இளநீரை ஆட்டிப் பார்க்கும்போது ஆடினா, வேற காயை அல்லது வேற கடையைத் தேடிப் போகணும்னு அர்த்தம். 

சின்னது… பெரிசு! 

சின்ன இளநீர்ல கொஞ்சம்தான் தண்ணி இருக்கும், பெரிய இளநீர்ல நிறைய இருக்கும்னு நினைக்க வேண்டாம். கடலோர மாவட்டங்கள்ல இருந்து வர்ற இளநீர்ல பெரிய காய்னாலும் தண்ணி கொஞ்சமாதான் இருக்கும். 

சிவப்பு இளநீர்! 

இளநீர்ல செங்காய், பச்சைக்காய்னு ரெண்டு வகை இருக்கு. ஆரஞ்சு கலர்ல இருக்கிற செங்காய்ல (செவ்விளநீர் ) வழுக்கை இருக்காது, முழுக்க முழுக்கத் தண்ணி நெரம்பியிருக்கும். பச்சைக்காய்ல வழுக்கை இருக்கும், செங்காயை விட ருசியா இருக்கும்னாலும், செங்காய்தான் பச்சைக்காயைவிடக் குளிர்ச்சியானது.’’

இனி இளநீர் வாங்கும்போது குழப்பம் வேண்டாம்… குளிர்ச்சி மட்டுமே!!

Post a Comment

0 Comments