தேசிய பிராட்பேண்ட் திட்டம்

தொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட்பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக்கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக்காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI)கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட்பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர்நெட் இணைப்புகளை வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் தரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டேட் ஆப்டிகல் பைபர் ஏஜென்சீஸ் State Optical Fiber Agencies அமைக்கப்படும். இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். இவற்றை இணைக்கும் வகையில் தேசிய ஆப்டிகல் பைபர் ஏஜென்சி National Optical Fiber Agency (NOFA)ஒன்று மத்திய அரசின் அமைப்பின் கீழ் இயங்கும்.
நகரங்களில் 10 Mbps வேகத்தில் இணைய இணைப்பு தரப்படும். இதற்கான உரிமங்களை ரிலையன்ஸ் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவை முறையே மும்பை மற்றும் குர்கவான் நகரங்களில் 4ஜி சேவையை சோதனை முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டன. இது வர்த்தக ரீதியில் 2012 ஆம் ஆண்டில் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் சென்றால், பிராட்பேண்ட் பெரும் அளவில் மக்களிடையே பரவத் தொடங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

Post a Comment

0 Comments